புதிய குறுநாவல் – பசுவன் – அத்தியாயம் 3 இரா.முருகன் –

3)
குலாலர் தெருவில் ஆறுமுக வேளார் வீட்டுக்குப் பெருங்கூட்டமாகப் பெண்கள் புறப்பட்டபோது ராத்திரி ஏழு மணி ஆகியிருந்தது. எல்லா வயதிலும் பெண்கள். சீட்டிப் பாவாடையில் ஏழெட்டு வயசுப் பெண்கள் முதல் புதுப்பட்டுப் புடவையில் அறுபது வயது மூதாட்டிகள் வரை மெல்ல நடந்து வர, நடுவே கல்யாண ஊர்வலத்துக்கு மாப்பிள்ளையை உட்கார்த்தி வரும் பழைய ஃபோர்ட் காரில் சீத்து கழுத்தில் மல்லிகைப்பூ மாலையோடு மிரள மிரளப் பார்த்தபடி வந்தான்.

இன்றைக்கு அவனுக்குச் சாப்பிடக் கிடைத்தது வருடம் ஒரு முறை பசுவனாகக் கிடைக்கும் உச்சபட்ச தீனியை விட மிக அதிகம் தான். ராத்திரி மோர்சாதம் சாப்பிட்டுப் படுக்கலாம் என்று உத்தேசித்திருந்தவனுக்கு வரிசையாக தீனி வந்துகொண்டிருந்தது. அது அவன் வக்கீல் வீட்டுக் கூடத்தில் நுழைந்தபோது ஆரம்பமானது.

”பசுவன் வந்தாச்சு. பசுவன் வந்தாச்சு”.

முதுபெண்கள் உற்சாகமாகக் கூவ கூடத்தில் ஊஞ்சலிலும் தரையிலுமாக உட்கார்ந்து கொண்டிருந்த பெண்கள் ஏற்று வாங்கி எதிரொலித்தார்கள்.

“பசுவன் வந்தாச்சு”.

கூச்சத்தோடு உள்ளே நுழைந்து ஓரமாகச் சுவரில் சாய்ந்து நின்றான் சீத்து.

“சீத்து வாடா, ஊஞ்சல்லே வந்து ஜம்முனு மாப்பிள்ளை மாதிரி உட்காரு அண்டர்வேர் போட்டுண்டு வந்தியோ” என்று விசாரித்தாள் வக்கீல் மாமி. எல்லாரும் சேர்ந்து சிரித்த சத்தம் தெருக் கோடிவரை, தெருத் தாண்டி சங்கரநயினார் தெருவில் பாதி வரை கேட்டிருக்கும் என்று சீத்துவுக்குத் தோன்ற, அவனும் சிரித்தான். பக்கத்தில் வந்து அவன் முதுகைத் தடவி, சோழிப் பல் மின்ன வக்கீல் மாமி சிரித்தது முதல் தடவையாக வசீகரமாக இருந்தது அவனுக்கு.

போன வருஷம் பசுவும் கன்றும் கொண்டு வரப் போனபோது நிஜாரைக் களைந்து வேட்டி உடுத்தி வந்தது நினைவு வந்தது. மெல்லிசு வேஷ்டியில் உள்ளே எதுவும் போடாதது நிதர்சனமாகத் தெரிய ’திவ்யமான தரிசனம்’ என்று கூட்டமாகப் பாடினார்கள் அப்போது. அதற்கு அப்புறம் குஞ்சரன் எப்படியோ பணம் புரட்டி ரெண்டு ஜட்டி வாங்கிக் கொடுத்ததை மாற்றி மாற்றி இந்த வருஷம் முழுக்கப் போட்டு வருகிறான். இந்த வருஷம் திவ்ய தரிசனமே பாட வேண்டியிருக்காது.

மாமி வயதுக்கும் சிற்றாடை பெண்டுகள் வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு மூன்று பெண்கள் டால்கம் பவுடர் மணக்க சீத்துவைக் கையைப் பிடித்து இழுத்து, பின்னால் இருந்து முன்னே நகர்த்தி ஊஞ்சலுக்குக் கூட்டி வந்தார்கள்.

”பசுவனுக்கு பாலும் பழமும் தரணுமா?” ஒருத்தி கேட்டது கூட்டச் சிரிப்பில் அமிழ்ந்து போனது.
”ஏது நீ சோபானத்துக்கும் அனுப்பி வச்சுடுவே போலே இருக்கே, நீயும் போறியா?”

இன்னொருத்தி கேட்டதற்கு உச்ச பட்ச கூச்சல் உற்சாகமாக ஒலித்தது.

ஆண்கள் இல்லாத கூட்டத்தின் பெண் உற்சாகம். சீத்துவை உளுத்தம்மாவு பிசைந்து பிடித்து வைத்த பிள்ளையாராகப் பார்த்தார்கள் எல்லாருமே.

“பசுவனுக்கு வைக்கோலும் தண்ணியும் தந்தால் எதேஷ்டம். என்ன புல் தின்னுவே? பச்சைப் புல்லா, காஞ்சதா?”

சீத்துவுக்கு பொட்டைக் கோபம் வந்தது. வந்து என்ன பிரயோஜனம்?

“புண்ணாக்கும் தரட்டா?” அடுத்த கேலி. ”எள்ளுப் புண்ணாக்கு தின்னு. பசுவன் பல்லு திவ்யமா இருக்கும்”.

வக்கீல் மாமியும் இந்தக் கூத்தில் கலந்து கொள்ள, காலை நீட்டி சௌகரியமாக உட்கார்ந்திருந்த நாகுப் பாட்டியும் சுந்தரிப் பாட்டியும் ”கிளம்ப வேண்டாமா? நீங்க இப்படி அசமஞ்சமா நடமாடிண்டு இருந்தா பொழுது வெடிஞ்சிடும்” என்று முறையிட்டார்கள்.

“நாகசுவரக் காரங்களும் வந்தாச்சு”.

வக்கீல் குமஸ்தா வீரபத்திரன் ஒரு வினாடி உள்ளே எட்டிப் பார்த்துத் தகவல் அறிவிக்க சீத்துவுக்கு கொஞ்சம் ஆறுதல். எல்லாம் ஆண்களான கோஷ்டி.

அடுத்த வினாடி சுறுசுறுப்பாக அத்தனை பெண்களும் செயல்பட்டார்கள். சீத்துவுக்கு ஒரு குஞ்சாலாடு உருண்டை கிடைத்தது. திருப்பதி பிரசாத லட்டு மாதிரி பெரிய சைஸில் இருந்த அதை வக்கீல் மாமியிடம் துணிப்பை கேட்டு வாங்கிப் போட்டு எடுத்துக்கொண்டான். இரண்டு ஜிலேபி, ஒரு கிண்ணம் ரவாகேசரி, மசால்வடை என்று ஆர்வத்தோடு சாப்பிட்டான். நேரம் கெட்ட நேரமாக ராத்திரி ஏழு மணிக்குக் காப்பி கொடுத்தார்கள். என்றைக்கோ ஒரு நாள் காபி சாப்பிடக் கிடைக்கும் வீட்டுப் பையன் என்பதால் நேரம் காலம் பார்த்துச் சாப்பிட, குடிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ”சட்டையை கழட்டிடுடா” என்று அடுத்த ஆணை. கழட்டி எங்கே வைக்க என்று தேடினான் சீத்து. லட்டுப் பையிலேயே இருக்கட்டும் என்று யாரோ சொல்ல, வியர்வை ஊறிய சட்டையை அங்கே போடாதே என்று வக்கீல் மாமி சொல்லியதோடு லட்டு போட இன்னொரு பையும் கொடுத்தாள்.

சார்த்தி வைத்திருந்த கூடத்து அறையில் வைக்கக் கதவைத் திறந்தான்.

“அம்பி, அந்தக் கதவை எல்லாம் திறக்கக் கூடாது. மூடின எந்தக் கதவையும் தான். வந்தோமா, சாப்பிட்டோமா, சம்பாவனை வாங்கிண்டோமா போனோமான்னு இருக்கணும் தெரிஞ்சுதா?”

வக்கீல் வீட்டுச் சமையல் மாமி படபடவென்று அவன் காதில் மட்டும் கேட்கிற குரலில் பேசிவிட்டுக் கதவைத் திரும்ப மூடியது பார்க்கப் பயமாக இருந்தது.

வீபுதியை சம்படத்திலிருந்து எதேஷ்டமாக சீத்துவின் உள்ளங்கையில் கொட்டி குழைத்து நெற்றியிலும், புஜத்திலும் நெஞ்சிலும் பூசச் சொன்னார்கள். யாரோ நெற்றியில் சந்தனம் தொட்டுப் போனார்கள்.

“நெஞ்சிலேயும் பூசேண்டி பாகி.. உன் நெஞ்சிலே இல்லே, அவனோடது” என்றாள் டாக்டர் மாமி சந்தனப் பேலா கொண்டு வந்தவளிடம்.

“அவன் என்ன என் ஆம்படையானா?” பாகீரதி கேட்டாள். குமிழிட்டு இன்னொரு சிரிப்பு அங்கே தான் ஆரம்பித்தது. ஓரத்தில் சன்னமாகச் சரிகை போட்ட துண்டைப் பரிவட்டம் போல் அவன் தலையில் சுற்றி, கழுத்தில் மல்லிகைப்பூ மாலை போட்டு விட்டார்கள்.

“அந்தப் பக்கம் திரும்பிக்கறோம். அந்த சோமனை அதாண்டா வேஷ்டியை கட்டிண்டு நிஜாரைக் களை”, என்று சொல்லி எந்தப் பக்கமும் திரும்பாமல் அவன் உடுப்பு மாற்றுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாதி வெளிச்சமும் பாதி இருட்டுமாக இருந்த கூடத்தில் பாகீரதியின் மூக்குத்தி ஒளிர்ந்தது சீத்துவுக்கு வேண்டியிருந்தது. உடுப்பு மாற்றும்போது அவள் பார்ப்பது அவனுக்கு புது சந்தோஷத்தைத் தந்தது.

”இன்னும் கொஞ்சம் பெரிசா பெரியவனா இருந்தா என் நாத்தனாருக்குக் கல்யாணம் பண்ணி வச்சுடுவேன்”.

அடுத்த கிண்டலை சிரமப்பட்டு அடக்கி நாகசுவரக் காரர் கரகரப்ரியா வாசிக்க, சக்கனிராஜ என்று அநேகமாக எல்லோரும் சேர்ந்து பாடியபடி சீத்துவை நட்ட நடுவில் காரில் வைத்து அந்த ஊர்வலம் குலாலர் தெருவுக்குள் வந்தது இப்படித்தான்.

ஆறுமுக வேளார் வீட்டு வாசலில் ஆரத்தியும், பூவுமாக வரவேற்கக் காத்திருந்தார்கள்.

களிமண்ணில் பிடித்து வைத்து அடுப்புக் கரியும், காவிக்கட்டியும் கொண்டு நிறம் பூசி பானை சட்டியோடு சுட்டெடுத்த ஒரு பசுவின் பொம்மையும், கன்றின் பொம்மையும் தாமிரத் தாம்பாளங்களில் ஜவந்திப்பூ மாலை சார்த்தி வைக்கப் பட்டிருந்தன.

”பசுவன் தலையிலே பசுவையும் கன்னுக்குட்டியையும் ஏத்த வேண்டியது. பஜனை மடத்துக்குப் போக வேண்டியது”.
ஊர்வலத்தைத் தொடர்ந்து சைக்கிள்களில் வந்த ஆண்கள் நாலைந்து பேர் சொல்ல, ஆமா ஆமா என்று பலமாகப் பின்பாட்டு பாடிய கும்பலில் சீத்துவின் அப்பா குஞ்சரனும் உண்டு.

போன வருஷத்தை விடப் பெரிய பசு. நிஜக் கன்றுக்குட்டிக்கு காலே அரைக்கால் சைஸில் களிமண் கன்றுக்குட்டி. கனமா இருக்குமா? யாரோ யாரிடமோ கேட்க சீத்து எடுக்கப் போன பசுவையும் கன்றையும் தொடாமல் நின்றான்.

“ஒரு பொங்கல் பானை கனம் கூட இருக்காது ரெண்டும். ஏத்தி வையுங்கோ” என்றார் ரிடையர்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டர். ஏற்றி வைத்தார்கள். சீத்துவின் தலை கொள்ளாமல் கன்றுக்குட்டியை ஊர்வலக் காரில் அவன் மடியில் வைத்தார்கள். திரும்ப நடந்த ஊர்வலத்துக்கு முன்னால் ’தாமரை பூத்த தடாகமடி’ வாசித்தபடி நாதசுவர கோஷ்டி போனதால் சங்கீதத்தில் மயங்கி பேச்சு ஆகக் குறைவாகப் போனது.

சேர்வார் ஊருணிக்கரையோடு நடந்து ராஜ வீதி திருப்பத்தில் பஜனை மடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது சீத்துவுக்கு ஒண்ணுக்கு வந்துவிட்டது. அப்பாவை அழைக்க அவன் குரல் நாதசுவர தித்திப்பில் அவருக்குக் கேட்காமல் போனது.

காரோடு நடந்து வந்த ஒரு பெண் ”என்னடா, நெளியறே, அங்கே இங்கே எறும்பு கடிச்சுடுத்தா?”, என்று கண்ணில் குறும்பு மின்னக் கேட்டாள்.

“இல்லே, ராயர் மாமி, ஒண்ணுக்கு போகணும்”.

“போயேன், யார் வேண்டாம்னா”.

விஸ்தாரமாக வாசிக்க நாதசுவர கோஷ்டி சிவன்கோவில் தெரு திருப்பத்தில் நின்றபோது மடியில் இருந்து கன்றை எடுத்துப் பக்கத்தில் வைத்துவிட்டு சீத்து ஒரே ஓட்டமாக ஊருணிக்கரைக்கு ஓடினான். நாதசுவத்தையும் மீறும் சிரிப்பும் கூச்சலும் எழ, ஆனந்தம் பாடித் தாலி கட்டும் நேரத்தில் வாசிப்பது போல் தவுலும் நாதசுவரமும் உச்சத்தில் ஒலித்து இறங்கி இசையைத் தொடர்ந்தன.

”கையை அலம்பிண்டு பசுவைத் தொடு” என்று வக்கீல் மாமி ஜக்கில் இருந்து வார்த்தது பால். அதில் கை அலம்பி பிசுபிசு என்று இருக்க வழியில் யார் வீட்டிலோ சொம்பில் தண்ணீர் வாங்கி இன்னொரு முறை கை கழுவல். அந்தப் பழைய சொம்பை சீத்து திரும்பித் தரும்போது ஓரமாக நசுங்கி உடைந்திருந்த பாத்திரக் கழுத்தில் அவன் இடது கை பட்டு ஆழமாகக் கீறி விட்டது. கீறல் வழியே ரத்தம் எட்டிப் பார்த்து அவசரமாகக் கோடு போட்டது. சீத்து சின்னக் குழந்தை போல அழுதான்.

ரத்தம் இன்னும் கசிய அவர்கள் பஜனை மடத்தில் போய்ச் சேர்ந்ததும் ஒரு துண்டால் அவன் கையில் தண்ணீரில் நனைத்துக் கட்டுப் போட்டு ’இப்போ நின்னு போய்டும்டா அசடு. இதுக்கு அழுவாளா’ என்று பல குரல்களும் குழந்தையைச் சமாதானப்பட்டுத்துவதுபோல் ஒலித்தன. ஒரு மைசூர் பாகும் இன்னொரு ஜிலேபியும் தின்ற சீத்து நாலு கட்டி தேங்காய் பர்பியை நியூஸ்பேப்பரில் கட்டிப் பையில் வைத்துக்கொண்டான். ஜீரணமாக ஒரு பெரிய டம்ளர் சுக்கு, வெல்லம் போட்டுக் காய்ச்சிய பானகம் குடித்து, திருப்தியோடு வீடு நோக்கி நடந்தான்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன